Thursday, December 11, 2008

வாரணம் ஆயிரம்

வாரணம் ஆயிரம் தமிழ் சினிமாவின் தரமான ஓரு படைப்பு நமது மேல் இமைக்கும் கீழ் இமைக்கும் நடுவில் நின்று கொண்டு இமைகொட்ட விடாமல் பிரமிக்க வைத்திருப்பது சூர்யாவும், ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவும்தான்! சூர்யாவின் நடிப்பில் ராணுவ மிடுக்கு என்றால், ரத்னவேலுவின் ஒளிப்பதிவில் ரத்தின ஜொலிப்பு! ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் நம்மை அள்ளிக் கொண்டு போகிறது! ஆயிரம் யானைகளை இழுத்துச் செல்ல இந்த மூன்று குதிரைகளே போதும் என்று நினைத்துவிட்டார் போலும் கவுதம்! படம் நெடுகிலும் பிரேக் பிடித்துக் கொண்டே வண்டி ஓட்டியதுபோல பிரமை! (கொஞ்சம் கத்தரி போட்டா ரிலீஃப் கிடைக்கலாம்) அப்பா சூர்யா கேன்சரில் இறந்துவிட, ராணுவத்தில் இருக்கும் மேஜர் சூர்யாவுக்கு தகவல் போகிறது. தன் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் அப்பாவின் துணை எப்பேர்பட்டது என்பதை அசை போடும் சூர்யாவின் மௌன அழுகையும், மனசை பிசையும் பிளாஷ்பேக்கும்தான் கதை. வழக்கம்போல் 'வாழை மரம் தன் வரலாறு கூறுதல்' ஸ்டைலைதான் இந்த படத்திலும் பின்பற்றியிருக்கிறார் கவுதம் வாசுதேவ மேனன். 19 வயசு சூர்யா வெளிப்படுத்தும் அடலசன்ட் குறு குறுப்புகள் அழகு! (விட்டால் செல்வராகவனை மிஞ்சிவிடுகிற வாய்ப்புகள் இருந்தும் அடக்கி வாசித்த கவுதமுக்கு நன்றி) அப்பா சூர்யாவுக்கு கச்சிதமாக பொருந்துகிற மேக்கப்பும், நடிப்பும், அளவெடுத்து அவருக்காகவே உருவாக்கப்பட்ட கம்பீரம்! அடிவாங்கிக் கொண்டு வந்து நிற்கும் பிள்ளையிடம், எதுக்காக எக்சர்சைஸ் பண்றே? போய் அடிச்சிட்டு வா என்பதும், அதே பிள்ளை போதைக்கு அடிமையாகி பேயாட்டம் போடும்போது தவிப்பதுமாக சூர்யாவின் ஸ்கோர், ஜோர்! தொண்டையில் கேன்சர் வந்து பேச முடியாத தருணத்தில் பேரப்பிள்ளைக்கு கதை சொல்ல முடியவில்லையே என்று தவிப்பது நெஞ்சை அடைக்கும் சோகம். அமெரிக்காவில் அறிமுகமாகும் நண்பரின் குழந்தையை காப்பாற்ற சூர்யா போராடும் அந்த எபிசோட், த்ரில் ரேஸ்! சண்டைக்காட்சிகளில் உச்சக்கட்ட உக்கிரத்தை காண்பிக்கிறார். என் இனிய பொன் நிலாவேவை கிடாரில் அசைபோடும் சூர்யா, ரயிலில் சமீரா ரெட்டியிடம் மனசை தவறவிட்டு, அதை அமெரிக்காவில் மீட்டெடுக்கிற காட்சிகள் கவிதை. எங்கிருந்தாலும் வருவேன் என்கிற சூர்யா, சமீராவை அமெரிக்கா வரை சென்று துரத்துவது சுவாரஸ்யம் என்றால், அங்கே ஏற்படும் முடிவு திகைப்பு தரும் திருப்பம். ஜெமினி காலத்திற்கு இழுத்துப் போகிறது சிம்ரன்-சூர்யா ஜோடிகளின் காதல். காஸ்ட்யூமருக்கும், ஆர்ட் டைரக்டருக்கும் ஸ்பெஷல் அப்ளாஸ் போடலாம். நீண்டகாலம் கழித்து சிம்ரனின் ரசிகர்கள் புத்துணர்ச்சி பெறுவார்கள். தமிழ் படங்களில் நடிக்க கூடாது என்று திவ்யாவுக்கு கன்னட திரையுலகம் கட்டுப்பாடு விதித்தால், தமிழ் ரசிகர்கள் தேடிப் போயாவது நன்றி சொல்வார்கள். அமெரிக்காவுக்கே போயிருந்த அனுபவத்தை தருகிறது ரத்னவேலுவின் ஒளிப்பதிவு. பின்னணி இசையில் மட்டுமல்ல, எல்லா பாடல்களிலும் நம்மை இருக்கையோடு கட்டிப்போடுகிறார் ஹாரிஸ். குறிப்பாக 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை...' ஒரு காட்சியில் டபடபடப சத்தத்தோடு ஹெலிகாப்டரில் போய் இறங்குகிறார்கள் ராணுவ வீரர்கள். இவர்கள் வரும் வரைக்கும் தப்பித்து ஓடாமல் இருக்கிறார்களாம் தீவிரவாதிகள்? இடையிடையே வரும் தமிழ் வசனங்கள் இது தமிழ்ப்படம்தான் என்று நிரூபிக்க வசதியாக இருக்கும். சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் கவுதம் காட்டிய வாரணம், கவர்ந்திழுக்கும் தோரணம்!

Wednesday, July 16, 2008

கவிக்கோ அப்துல்ரகுமான் கவிதைகளிலிருந்து....

கவிக்கோ அப்துல்ரகுமான் கவிதைகளிலிருந்து....

**

உன் பாதையும்
என் பாதையும்
வெவ்வேறாக இருக்கலாம்
ஆனால் அவை
ஒரே கையின்
ரேகைகள்

**

நீ
கண்ணீரை விட
ஆழமானவள் (ன்)
சோகத்தை விட
அழகானவள் (ன்)


**

பாவத்திற்கு கிடைத்த
மன்னிப்பை போல
நீ எனக்குக் கிடைத்தாய்


என்னை மறந்துவிட்டதாகச்
சொல்கிறாய்
பிறகு ஏன்
உன் கண்ணில் நீர்


ஒவ்வொரு மூச்சும்
உன்னை சந்திக்கப்
புறப்படுகிறது
ஏமாற்றத்தோடு
திரும்புகிறது


**

நான் உன் மூச்சு
என்னை நீ விட்டாலும்
மீண்டும்
வாங்கித்தான் ஆகவேண்டும்


**

உன் மௌனத்தில்
என் காயம் உறங்க
இடம் கொடு


**

நீ
சொல்ல முடியாத
சொல்
சொல்ல முடியாததைச்
சொல்லும் சொல்


**

உன் வேர்கள்
என் கண்ணீரை
தேடி வருகின்றன


**

தண்ணீர்த் தொட்டி
மீன்களைப்போல
உனக்குள்ளேயே
நீந்திக் கொண்டிருக்கின்றது
என் எண்ணங்கள்


**

உன் கண்ணில்
நான் செத்து
மிதக்கிறேன்


**

கூடு கட்டத்
தன் உதிர்ந்த இறகுகளையே
பொறுக்கும் பறவையைப் போல
நான் உன் நினைவுகளைப்
பொறுக்குகிறேன்


**

என்னை
என்னிடத்தில் ஒப்படைத்தாய்
என்னை வைத்துக்கொண்டு
என்ன செய்வது என்று
தெரியவில்லை எனக்கு


**

என் வாழ்க்கைப்
பயணத்திற்குக்
கட்டுச் சோறாய்
உன் நினைவுகள்
தாகத்திற்கு அருந்தக்
கண்ணீர்


**

நீ நதி
நான் உன்னில் விழுந்த
சருகு
நீ எங்கே கொண்டு போகிறாயோ
அங்கேதான்
நான் போகமுடியும்


**

ஆயுள் முழுவதும்
உனக்காகக்
காத்திருக்கத் தயார்
மரணம் போல்
நீ நிச்சயமாக வருவதாயிருந்தால்


**

உன்னிடம் நடந்து
காயங்களோடு
திரும்புகிறது மனம்


**

மனம்
பசித்து அழும்போது
உன் நினைவுகள்
அள்ளி எடுத்து
பாலூட்டுகிறது


**

உன் நினைவுகளும்
தொட முடியாத
தூரத்திற்கு
போகிறேன்


என் பூக்களில் நீ
வசவுகளை எழுதிகிறாய்


**

நீ நடந்த
பாதையில் நடந்தேன்
காலில் தைத்தது
இதயச் சில்


**

உன் இதயத்திற்குள் நுழைய
வழி பார்க்கிறேன்
ஊசியில் காதைத் தேடும்
பார்வை மங்கிய
கிழட்டுத் தையல்காரணைப்போல


**

பல் பிடுங்கிய பாம்பாய்
என்னை
உன் பெட்டிக்குள்
வைத்திருக்கிறாய்
நீ விரும்பும் போது
மகுடி ஊதி
ஆட வைக்கிறாய்


பிரிந்து போகின்றவளே
நீ திரும்பிப் பார்க்காவிட்டாலும்
உன் இதயம்
திரும்பிப்பார்கிறது


**

நீ பலவீனமானவள்
ஆனால்
உன் ஆயுதங்கள்
பயங்கரமானவை


**

என் உடைந்த கனவுகளால்
உன் வீட்டைக்கட்டிக்கொள்
உன் இதயத்தில்
எரியும் நெருப்பால்
உன் விளக்கை ஏற்றிக்கொள்


உன் நினைவு வருமுன்
வந்துவிடு


**

நான்
எங்கே சென்றாலும்
அது உன் சபையாகவே
இருக்கிறது


கூட்டவோ குறைக்கவோ
தேவையில்லை
நீ எல்லா வகையிலும்
சரியாக இருக்கிறாய்


**

இந்தக் கவிதைகள்
பழைய காயங்களைத்
திறக்கின்றன


சந்திப்பு
உன் ஆடை
பிரிவு
உன் நிர்வானம்


கண்ணைவிட்டு
நீ புறப்படுவது போல
உன்னை விட்டு
நான் புறப்படுகிறேன்


**

உன் நினைவுகள்
என் சிதை
அதில் எரிந்து கொண்டேயிருப்பது
என் வாழ்க்கை

காதலித்து கெட்டுப் போங்கள்!

கவிஞர்கள் எழுதி மனதில் பதிந்த சில வரிகள் சில

ஒரு பாதி கதவு நீ
மறு பாதி கதவு நான்
பார்த்துக்கொண்டே
பிரிந்திருக்கிறோம்
சேர்த்து வைக்க
காத்திருக்கிறோம்!

நா.முத்துக்குமார்


காதல் கவிதை
எழுதுகிறவர்கள்
கவிதை மட்டும்
எழுதிக்
கொண்டிருக்கிறார்கள்
அதை வாங்கிச் செல்லும்
பாக்கியசாலிகளே
காதலிக்கிறார்கள்!

நா.முத்துக்குமார்


கொலுசு
உன் கால்களோடு
போய்விட்டது!
சத்தம் மட்டும்
என் காதுகளோடே
வருகிறது!

பா.விஜய்


எண்ணெய் அப்பிய
ரெட்டை ஜடையில் சிக்கி
வழுக்குது
மல்லிகைப் பூவும் என்
மனசும்.
கம்பெனி சைக்கிளில்
போகும் உனை
வாடகை சைக்கிளில்
தொடர்வேன்.
உன்னை சமீபிக்கையில்
அறுந்து போகும்
செயினும் என் தைரியமும்.
பேச முடிவதே
கொஞ்ச நேரம்தான்!
வெட்கத்தை வீட்டிலேயே
வைத்துவிட்டு
வரக்கூடாதா?

பா.விஜய்


ரோஸ் ஜஸ் சாப்பிட்டு
வாய் சிவக்க நிற்பாய்!
நிற மாற்ற விதி
என்பது
இயற்பியல் அல்ல
இதழியல்!

பா.விஜய்


சின்ன வயசில் நிறைய
சிலேட்டு குச்சிகளை
முழுங்குவேனாம்!
இருபது வயதுகளில்
இப்படியெல்லாம்
உன்னைப் பற்றி
எழுதத் தானோ?

பா.விஜய்


இரவில் ஒளிவிடும்
உன் உடலைப்
பார்க்கும் வரை
தெரியாது எனக்கு
மின்மினிகள்
மின்னுவது
காதலால்தான்
என்பது.

பழநிபாரதி


யாரோ நம் பெயரை சுவரில்
கிறுக்கியிருந்ததைப்
படிக்கும் பொழுது
அச்சமாக இருந்தது.
நேற்று அதன்மீது
காதல் திரைப்பட போஸ்டரை
ஒட்டியிருந்ததைப் பார்க்க
மகிழ்வாக இருந்தது.

கபிலன்


உன் காலடியில்
ஊரும் எறும்பை
தயவுசெய்து
நசுக்கிவிடாதே
அது இழுத்துவரும் இரை
நம் காதலின்
பெயரெழுதிய
அரிசியாக இருக்கலாம்.

பழநிபாரதி


நீ ஒருமுறைதான்
பார்த்துவிட்டுப்
போனாய்என் வீட்டு ஆளுயரக்
கண்ணாடி
உன்
நிழற்படமாகிவிட்டது.

பழநிபாரதி


இரவும் இரவும் சந்திக்கும்
இரகசியமான இடம்
உன் கூந்தல்.
அதைவிட இரகசியமான
இடம்
உன் இதயம்.
அதனால்தான் அங்கே
என்னை நீ
என்ன செய்கிறாய்
என்றே
தெரியவில்லை.

பழநிபாரதி


நீ பருவமகள்
உண்மைதான்.
குளித்து முடித்த உன்
கூந்தலில்
நீர் சொட்டும் போது
மழைக்காலம்.
சீவும்போது
இலையுதிர்காலம்.
நீ பூச்சூடும்போது
வசந்தகாலம்.
அதை அள்ளி
நான் போர்த்திக்
கொள்ளும்போது
குளிர்காலம்.

பழநிபாரதி


ஆதாம் ஏவாள் கனவில்
ஆப்பிள் துரத்துகிறது
ஆப்பிள் கனவில்
பாம்பு துரத்துகிறது
பாம்பின் கனவில்
சைத்தான் துரத்துகிறது
அனைவரில் கனவிலும்
தோன்றிகடவுள் சொல்கிறார்
காதலித்து கெட்டுப் போங்கள்!

நா.முத்துக்குமார்


உனக்கும் எனக்கும்
பிடித்த பாடல்
தேநீர்க் கடையில்
பாடிக் கொண்டிருக்கிறது
கடைசி பேருந்தையும்
விட்டு விட்டு
கேட்டுக்
கொண்டிருக்கிறது
காதல்!

நா.முத்துக்குமார்

Thursday, June 26, 2008

தோழனே....!!!!

தோழனே....!!!! நீ எனக்கு நண்பனாக கிடைக்க
நான் ஏது தவம் செய்தேனோ?
கலகலவென நகைக்கும் வயதில்
சலனமில்லாமல் இவ்வளவு சோகமா?


உனக்குள் இருக்கும் சோகத்தை
எனக்குள் இன்றே புதைத்துவிட்டு
கள்ளமின்றிச் சிரித்திட உல்லாச
வானில் பறந்திடு


உன் இலட்சியங்களை நிறைவேற்ற
என்றும் உனக்கு துணையாவேன்
இன்றே விரைந்து புறப்படு
நன்றே நடக்கும் உன்வாழ்வில்


பழையனவற்றை மறந்திடு புதியதை
தேடி விரைந்திடு சோகத்தை தூக்கி
எறிந்திடு தோழா என்
தோளில் தலை சாய்த்திடு


ஆயிரம் உறவுகள் தோன்றியும்
அன்பில்லையே என சலிக்காதே
நட்பைவிட வேறேது இன்பம்
நானிருப்பேன் கலங்காதே

முதற்பதிவு

தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு என் வணக்கங்கள்... இன்று முதல் என் பதிவு வலையேறுகிறது.... நல்ல சில பதிவுகள் இனி என் வலைப்பக்கங்களில் வலையேறும் நன்றி அன்புடன் கஜன்